இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி.

தீபாவளி - தீப+ஆவளி. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து கொண்டாடுவதுதான் தீபாவளி.தீபாவளித் திருநாளில் மக்கள் பட்டாசுகள் வெடித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் வழங்கி வாழ்த்துக் கூறி மகிழ்ச்சியை ஒருவொருக்கொருவர் பறிமாறிக் கொள்வர். இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் தீபாவளி குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது. திருமணம் முடிந்த முதல்
ஆண்டில் வரும் தீபாவளியை "தலை தீபாவளியாக" புதுமணத் தம்பதியர் கொண்டாடி மகிழ்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை பட்டாசுகள், புத்தாடை, இனிப்புகள் என்று அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கும் குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வர். தீபாவளியை நரக சதுர்த்தி என்றும் வழங்குவர். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்த நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரமான கண்ணன் அழித்த நாளையே நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.நாராயணர் வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் தான் நரகாசுரன். நரகாசுரனுக்கு அழிவில்லாத வரத்தை பூமாதேவி வேண்டினாள். ஆனால் நாராயணனோ அப்படி அனுக்கிரஹம் செய்ய முடியாது. நரகாசுரனை தாமே சம்ஹாரம் செய்து தனது அருகில் வைத்துக் கொள்வதாக பூமாதேவியிடம் உறுதி அளித்தார்.கண்ணன் நரகாசுரனை வதம் செய்தது இந்நாளில்தான். நரகாசுரனின் கொடுமையால் நாட்டு மக்கள் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். நரகாசுரனின் மறைவிற்குப் பிறகு இருள் நீங்கி வெளிச்சம் வந்தது. அப்போது ஏற்றிய தீப ஒளியே தீபாவளி என்றாகிவிட்டது.(மூலம் - வெப்துனியா)
No comments:
Post a Comment