
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் வருகிற 9ம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் வைகை ஆற்றில் அழகர் இறங்குவது ஆகியவை ஆகும்.
பட்டாபிஷேகம் 16ம் தேதி நடக்கிறது. திருக்கல்யாணம் 18ம் தேதி நடைபெறுகிறது. 19ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரளுவார்கள்.
திருக்கல்யாண வைபவம் வழக்கமாக டிவிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்த முறை முதல் முறையாக இன்டர்நெட்டில் நேரடியாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://maduraimeenakshi.org/ என்ற தளத்தில் திருக்கல்யாண வைபவத்தை நேரடியாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்று கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் டி.கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த இணையதளத்தில் கோவில் குறித்த அனைத்து விவரங்களும், ஆன்லைனில் பூஜை செய்வது உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
Tuesday, 8 April 2008
மீனாட்சி திருக்கல்யாணம்: 'நெட்'டில் நேரடி ஒளிபரப்பு!
Posted by tksora at 7:26 am 1 comments
Tuesday, 25 March 2008
காஷ்மீரில் ஆசியாவின் மிகப் பெரிய துலிப் கார்டன்!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் பூக்கள் தோட்டம் என்ற பெருமையைப் பெற்றுள்ள, ஸ்ரீநகர் துலிப் கார்டன், ஏப்ரல் மாதம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது. துலிப் தோட்டத்தில் சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பழுப்பு நிறத்திலான பூக்கள் கொண்ட செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன.
தொலைவிலிருந்து பார்க்கும்போது வானவில்லை, நேராக்கி படுக்க வைத்திருப்பது போல தோன்றுகிறது இந்த துலிப் பூக்கள் தோட்டம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கொள்ளை அழகுக்கு பெயர் போனது. பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ள காஷ்மீருக்குப் புதுப் பெருமை சேர்ந்துள்ளது இந்த துலிப் தோட்டம்..
ஸ்ரீநகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட துலிப் பூக்கள் தோட்டம், ஆசியாவிலேயே மிகப் பெரிய துலிப் தோட்டம் என்ற பெருமையைப்
பெற்றுள்ளது.
5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தோட்டம், தால் ஏரியின் எதிரே கண்ணைக் கவரும் வகையில் ஜொலி ஜொலிப்புடன் காணப்படுகிறது.
சபர்வான் மலைப் பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த துலிப் தோட்டத்தில் மொத்தம் 12 லட்சம் துலிப் செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த செடிகளில் தற்போது பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன. அடுத்த சில நாட்களில் பூக்கள் அனைத்தும் பூத்து விடும் என்கிறார் மாநில தோட்டக்கலைத்துறை இயக்குநர் நாகாஷ்.
இந்த துலிப் பூக்கள் தோட்டத்தில் நான்கு நீரூற்றுகள், சிமென்ட் நடைபாதைகள், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவையும் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன.
முதல்வர் குலாம் நபி ஆசாத்தின் கனவுத் திட்டம் இந்த தோட்டம். கடந்த ஆண்டே இந்தத் தோட்டம் ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தது.
இந்த அழகிய மலர்த் தோட்டத்திற்குள் சென்று பூக்களின் ரம்யத்தை அனுபவிக்க பெரியவர்களுக்கு தலைக்கு ரூ. 50ம், சிறியவர்களுக்கு தலைக்கு ரூ. 20ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இந்தத் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகிறது
Posted by tksora at 9:00 am 0 comments
Wednesday, 30 January 2008
முதன்மை ஐ.டி நிறுவனங்களில் 29 இந்திய நிறுவனங்கள் !!

தகவல் தொழில்நுட்பத் துறையில் நம்பத்தகுந்த முறையில் செயல்பட்டு வரும் முதன்மையான 100 நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் 29 இடம்பெற்றுள்ளன.
குளோபல் சர்வீசஸ் மேகஸீனின் வெளியீட்டு நிறுவனமான சைபர் மீடியா இத்தகைய ஆய்வை நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதற்கென்று அடையாளப்படுத்தப்பட்ட 10 பிரிவுகளில் 4 இந்திய நிறுவனங்களும், 4 அமெரிக்க நிறுவனங்களும், சீனா மற்றும் மெக்சிகோவிலிருந்து ஒரு நிறுவனமும் இடம்பெற்றுள்ளன.
5 பிரிவுகளில் முதல் 10 இடங்களில் இந்தியாவின் இன்ஃபோசிஸ் நிறுவனம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்.சி.எல், ஜென்பேக்ட், டபுள்யூ.என்.எஸ் குளோபல் சர்வீசஸ் ஆகியவையும், அமெரிக்காவின் ஈ.டி.எஸ், சிடெல், இபாம் சிஸ்டம்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயன்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவையும், மெக்சிகோவின் சாஃப்ட் டெக், சீனாவின் நியூசாஃப்ட் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
மேலும் சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து 4 நிறுவனங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதும் பிரேசில் மற்றும் ரஷ்யாவிலிருந்து முறையே 3 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதும், அவுட் சோர்சிங் துறையில் இந்த நாடுகள் வளர்ந்து வருவதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து தங்களது 75 சதவீத வருவாயைப் பெற்று வரும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கால்பதித்து அங்கிருந்தும் வருவாய் ஈட்ட களத்தில் இறங்கியுள்ளன
Posted by tksora at 1:43 pm 0 comments
Thursday, 24 January 2008
குறைந்து வரும் மென்பொருள் வல்லுனர்களின் ஊதிய வேறுபாடு !!
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து தகவல் தொழில் நுட்ப துறையினர் நன்கு அறிவார்கள். இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது, இந்தியா மற்றும் அமெரிக்காவில் பணியாற்றும் மென்பொருள் வல்லுநர்களின் ஊதியத்தில் நிலவிய வேறுபாட்டை கணிசமாக குறைத்து வருகிறது.
இந்த வேறுபாடு கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்ததைவிட 21 விழுக்காடு தற்போது குறைந்துள்ளது. போட்டி சூழ்நிலை நிலவும் இந்நேரத்தில் குறைந்த ஊதியத்திற்கு தகவல் தொழில் நுட்பத்துறைக்கு வல்லுநர்கள் கிடைப்பது இந்தியாவில் தான் என்ற நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. ஊதிய விகிதம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வின் வெள்ளை அறிக்கையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியாவில் பணியாற்றும் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களுக்கும், அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கும் இடையேயான ஊதிய விகித வேறுபாடு 86 விழுக்காடாக இருந்தது. இது கடந்த ஆண்டு 82 விழுக்காடாகவும் தற்போது, 78 விழுக்காடாகவும் குறைந்துள்ளது.
அதிகாரிகள் மட்டத்திலான ஊதிய வேறுபாடு கடந்த 2006ஆம் ஆண்டு 68 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு 60 விழுக்காடாக குறைந்ததோடு தற்போது, ஆண்டுக்கு 52 விழுக்காடு என்ற அளவில் இந்த ஆண்டு உள்ளது. நடுநிலை மேலாளர்கள் மட்டத்தில் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த ஊதிய வேறுபாடு கடந்த 2006ஆம் ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 21 விழுக்காடு குறைந்து 48 விழுக்காடு என்ற நிலைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு இது 57 விழுக்காடாக இருந்தது.
தகவல் தொழில் நுட்பம் மற்றும் அயலக அலுவல் பணி (BPO) நிறுவனங்களின் செலவில் முறையே 45, 40 விழுக்காடு ஊதியத்துக்காக செலவிடப்படுகிறது. 2006-08க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பெறும் ஊதிய விகிதத்தில் உள்ள வேறுபாடு கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் குறிப்பாக, மென்பொருள் ஏற்றுமதி மூலம் அதிக அளவு வருவாய் மற்றும் லாபத்தை பெற்று வந்த நிறுவனங்கள் இதன் எதிர் விளைவை சந்திக்கும் விதமாக ஊழியர்களின் ஊதியத்தை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் மூலம் தங்களது வருவாய் மற்றும் லாபத்தில் குறைவு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொண்டன. இதே நிலை தொடரும் படசத்தில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து லாபத்தில் இயங்க முடியும்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலையால் வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் பணியில் தடங்கல் எதுவும் ஏற்படாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Posted by tksora at 10:50 am 0 comments
Labels: நாட்டு நடப்பு
Thursday, 10 January 2008
ரூ. 1 லட்சம் கார்

டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, டாடா குழுமத்தின் புரட்சிகரமான தயாரிப்பான, ரூ. 1 லட்சம் மதிப்புடைய டாடா நானோ கார் இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடாவின் மக்கள் கார் ரிலீஸாகி விட்டது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த கார் இன்று ரத்தன் டாடாவால் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்கள் கார் என டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவால் செல்லமாக அழைக்கப்பட்ட டாடாவின் புதிய ரூ. 1லட்சம் கார் இன்று டெல்லி, பிரகதி மைதானத்தில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டாடா நானோ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் காரை பெரும் கரகோஷத்திற்கு மத்தியில் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தி வைத்தார். முதல் காரை அவரே மேடையில் ஓட்டி வந்தார்.
வரிகள் தவிர்த்து இந்தக் காரின் விலை ரூ. 1லட்சமாகும்.
3 சிலிண்டர் 624 சிசி பெட்ரோல் என்ஜினுடனும், 33 பிஎச்பி சக்தியுடனும் கூடியதாக புதிய கார் உள்ளது.
30 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் இதில் இடம் பெற்றுள்ளது. நான்கு வேகங்களில் செல்லக் கூடிய கியர் வசதி இடம் பெற்றுள்ளது. ஏ.சி. வசதியும் காரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தக் காரில் பவர் ஸ்டியரிங் வசதி கிடையாது.
இதன் மைலேஜ் நகர சாலைகளில் லிட்டருக்கு 22 கிலோமீட்டராகவும், நெடுஞ்சாலைகளில் 26 கிலோமீட்டராகவும் இருக்கும். சராசரியாக 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தகரும்.
இரு சக்கர வாகனங்களையே பெரிதும் நம்பியுள்ள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த டாடா நானோ மிகப் பெரிய வரப் பிரசாதமாக அமையும் என்று ரத்தன் டாடா தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.
முன்னதாக, ரத்தன் டாடா ஆற்றிய வீடியோ உரையில், ரூ. 1 லட்சம் கார் குறித்த சிந்தனை எப்படி தோன்றியது என்பதை டாடா விவரித்தார்.
இந்தக் கார் தயாரிப்புக்கு முன்பு தான் சந்தித்த பிரச்சினைகள், சவால்கள் உள்ளிட்டவற்றை விவரித்தார்.
அதன் பின்னர் புதிய வகை கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ. 1 லட்சம் மதிப்புடைய புதிய வகை காரை ரத்தன் டாடா ஓட்டி வந்து மேடையில் நிறுத்தினார். பின்னர் டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர காரை அறிமுகப்படுத்தினார்.
ஸ்டாண்டர்ட் மற்றும் 2 டீலக்ஸ் வகைகளில் இந்த கார் வெளிவருகிகறது. மாருதி 800 காரை விட வெளிப்புறத்தில் 8 சதவீதம் சிறியது. அதேசமயம் மாருதியை விட 21 சதவீதம் உள்புறத்தில் பெரியதாகும்.
4 கதவுகளுடன், 5 சீட்களைக் கொண்டதாக இந்த புரட்சி கார் உள்ளது.
பாரத் 3 எமிஷன் மற்றும் ஈரோ 4 தரக் கட்டுப்பாட்டை இது பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.
பின்னர் ரத்தன் டாடா பேசுகையில், அனைத்து வகையான பாதுகாப்புகளும் இந்தக் காரில் உள்ளதை முதலில் சொல்லிக் கொள்கிறேன். எனவே இந்தக் காரின் விமர்சகர்கள் அதுகுறித்து இனிமேல் கவலைப்பட வேண்டாம்.
இது அளவில் சிறியது, ஆனால் தொழில்நுட்பத்தில் உயரியது. அதனால்தான் இந்தக் காருக்கு நானோ என பெயரிடப்பட்டது என்றார் ரத்தன் டாடா.
இந்த கார் மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு விநியோகத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
உலகிலேயே மிகவும் விலை குறைந்த கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும், செய்தி சேகரிக்கவும் உலெகங்குமிருந்து நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், கேமராமேன்கள் குவிந்திருந்தனர்.
அழகான வடிவில், பட் க்யூட்டாக காணப்படும் டாடா நானோ நிச்சயம் இந்திய மக்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
Posted by tksora at 7:25 am 0 comments
Labels: அறிதல் நன்று
Wednesday, 9 January 2008
பொங்கலுக்கு 8 படங்கள்!!!
பொங்கல் பண்டிகைக்கு 8 படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது.
தமிழர்களுக்கு மட்டுமல்லாது, தமிழ் திரையுலகினருக்கும் பொங்கல் பண்டிகைதான் ரொம்ப விசேஷம். அப்போதுதான் அதிக அளவிலான படங்கள் திரைக்கு வரும்.
தீபாவளியைப் போலவே பொங்கல் பண்டிகையின்போதும் பெருமளவிலான படங்களை ரிலீஸ் செய்ய திரையுலகினர் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
ஜனவரி 14ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் நிறையப் படங்களை பொங்கலுக்கு களம் இறக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த பொங்கலுக்கு 8 படங்கள் திரைக்கு வருகிறது. அது குறித்த ஒரு பார்வை:
1. பீமா - இயக்குநர் லிங்குச்சாமி. ஏ சான்றிதழுடன் படம் தணிக்கை ஆகி வந்துள்ளது. ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம் படு வித்தியாசமாக நடித்துள்ள படம். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த படம் இது. திரிஷா, விக்ரமுடன் சாமிக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார். எனவே எதிர்பார்ப்பு ஏகமாகவே உள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகி விட்டன. ஏ.எம். ரத்னத்திற்கு இப்படம் மறு பிறவி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பீமாவுக்கு எதிர்பார்ப்பு கூடுதலாகவே உள்ளது.
2. தங்கம் - இயக்குநர் கிச்சாஸ். மேகா நாயர் ஜோடியாக நடிக்க சத்யராஜ் கலக்கியுள்ள படம். கூடவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி சூப்பர் ஸ்டார் கவுண்டமணி சவுண்டு விட்டுள்ள படம்.
கிராமத்து நல்லவனாக இப்படத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கவுண்டமணியின் காமெடி தனது நடிப்பை தூக்கி சாப்பிட்டு விட்டதாக சத்யராஜே கூறியுள்ளதால், கவுண்டரின் கலாட்டாவை ரசிக்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
3. பழனி - இயக்குநர் பேரரசு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேரரசு மீண்டும் கலகலக்க வருகிறார். பரத் - காஜல் அகர்வால் ஜோடியின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஷக்தி சிதம்பரம் தயாரித்துள்ளார். வழக்கமான பேரரசுவின் மசாலாக்கள் தூவப்பட்ட, பரத்தின் முதல் அதிரடிப் படம்.
4. காளை - இயக்குநர் தருண் கோபி. திமிரு படப் புகழ் தருண் கோபியின் 2வது படம். சிம்புவின் சிலம்பலில் உருவாகியுள்ள படம். வேதிகா நாயகியாக நடித்துள்ளார். ஒரு பாட்டுக்கு நிலா உருக வைத்துள்ளார். சிம்பு டைப் படமாகவும், மசாலா படமாகவும் இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
5. வாழ்த்துகள் - இயக்குநர் சீமான். மாதவனுடன், சீமான் இணையும் 3வது படம். பாவனாவும், மாதவனும் இணையும் 2வது படம். கூட்டுக் குடும்பத்தின் அர்த்தம், முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படம். குடும்பத்தோடு தைரியமாக பார்கக் கூடிய படம் என்று சீமான் தைரியமாகவே சொல்கிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா.
6. பிரிவோம் சந்திப்போம் - இயக்குநர் கரு. பழனியப்பன். சேரன் நாயகனாக நடித்துள்ள படம். அவருக்கு ஜோடி சினேகா. நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பத்துப் பின்னணியில் அமைந்த படம். படம் உருவாகும்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பதால் ரசிகர்களும் ஆவலாகவே உள்ளனர்.
7. இந்திரலோகத்தில் நா. அழகப்பன் - இயக்குநர் தம்பி ராமையா. வடிவேலு நாயகனாக நடித்துள்ள 2வது படம். நாயகனாக முதல் முறையாக 3 வேடங்கள் பூண்டுள்ளார் வடிவேலு. ஷ்ரியா ஒரு பாட்டுக்கு செமத்தியான ஆட்டம் போட்டுள்ளார். சபேஷ் - முரளியின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன.
8. பிடிச்சிருக்கு - இயக்குநர் கனகு. முருகா பட நாயகன் அசோக் நடித்துள்ள படம். கூட நடித்திருப்பவர் விசாகா. லிங்குச்சாமியின் உதவியாளர் கனகு என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மனு ரமேசன் என்ற புதுமுகம் இசையமைத்துள்ளார்.
இந்தப் படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. கடைசி நேரத்தில் கூட ஏதாவது ஓரிரு படங்கள் சேரக் கூடும்.
எத்தனை வந்தால் என்ன, அத்தனையையும் ரசித்து ருசிக்க ரசிகர்கள் தயார்தான்!
Posted by tksora at 8:24 am 0 comments
Labels: சினிமா