Tuesday, 11 December 2007

சோஷியல் நெட்வொர்க்கிங் மூலம் ஐடி பணியாளர்கள் தேர்வு

ஆர்குட்.காம்(orkut.com), மை ஸ்பேஸ்(myspace.com), ஃபேஸ்புக்(facebook.com) உள்ளிட்ட சில நட்புறவு சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களில் நண்பர்களுக்கு நம்மை பற்றிய விவரங்களை நாம் அளிக்கும்போது நாம் உண்மையில் ஒரு பயோ-டேட்டாவையே அங்கு தருகிறோம். இதன் மூலம் பலருக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாகத்தான் உள்ளது.


ஆம்! முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஹெச்.ஆர். துறையைச் சேர்ந்தவர்கள், சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்கள், தனி நபர் மற்றும் குழு வலைப்பதிவுகளை தேடிச் சென்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை கண்டுபிடித்துக் கொள்கின்றனர்.

முன்னணி நிறுவனமான ஹெச்.சி.எல். நிறுவனம் தனது பணியாளர்கள் தேர்வில் சுமார் 10 சதவீதம் வரை வலைப்பதிவுகள் மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களிலிருந்தே தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லின்கெடின் என்ற வர்த்தக நோக்கமுடைய சோஷியல் இணையதளம் மூலம் தங்களது பணியாளர்கள் பலரை ஹெச்.சி.எல். நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

தனி நபர் வலைப்பதிவுகள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களைப் பார்த்து அதிலிருந்து தேவையான நபர்களை தேர்வு செய்வதற்கென்றே தனியான தேர்வுக் குழுவை நியமித்திருப்பதாக ஹெச்.சி.எல் நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.

அதாவது தகவல் தொழில்நுட்ப துறைக்கு தேவையான ஜூனியர் மட்ட பணியாளர்கள் மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ள நபர்களையும் இதுபோன்ற சோஷியல் நெட்வொர்க் மற்றும் வலைப்பதிவுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது பல நிறுவனங்கள். அதாவது குழு மேலாளர்கள், பொது மேலாளர்கள் என்று மிகப்பெரிய பதவிக்கான நபர்களும் வலைப்பதிவுகள் மூலம் கிடைக்கின்றனர் என்று ஹெச்.சி.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா கன்சன்ல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களை தங்களது மனித வள ஆதாரமாக பயன்படுத்தி வருகிறது.
மொத்தத்தில் இதுபோன்ற தேர்வு முறைகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. ஏனெனில் அனைத்து தரப்பு தொழில் வல்லுனர்களும் சோஷியல் நெட்வொர்க்கிங் வலைத்தள நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இது போன்று தேர்வு செய்யப்படும் நபர்கள் மீதான நம்பகத்தன்மையை சில நிறுவனங்கள் கேள்விக்குட்படுத்துகின்றன. மேலும் இது போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் மற்றும் தனி நபர் வலைப்பதிவுகள் பலவற்றை நம்ப முடிவதில்லை என்று சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் கருதுகிறது.

ஆனால் இது போன்ற தேர்வு முறைகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 15-18 சதவீதம் வரை தற்போது வளர்ச்சியடைந்துள்ளது என்று மாஃபாய் கன்சல்டன்சி நிறுவனம் தெரிவிக்கிறது.

எனவே சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளத்திலேயே இளைஞர்கள் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று கவலைப்பட வேண்டியத் தேவையில்லை. அது அவர்களது வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

No comments: